Sunday 13 March 2022

மசக்கை

உள்தள்ளிய நீரையும்
வெளிதள்ளிடும் மசக்கை...
இருவருட தாம்பத்தியத்தின்
பரிசு _ வயிரை நிறைக்க...
குடல் தள்ளும்
வாந்தியும் சுகமாகவே
தோன்றிற்று...
வீடாறு மாதமும்
கடலாறு மாதமுமாய் 
என்னவன்...
மசக்கை எனையாள
கரை கடந்தவன்
இதோ நிரையேழு
மாதத்தில் எனைத்தாங்க
வந்தே விட்டான்...

பார்லியும் சுரைக்காயும்
கைகொடுக்க நீர்
சரியாய் பிரிந்தாலும்
உப்பிசமாய் பளபளத்த
கால்கள் அவன்
விரல் நீவலுக்காய்
தவம் இயற்றிற்று...
பாரம் தாங்காது
இழுத்துவிடும் பெருமூச்சுகள்
அவனைப் பார்த்ததும்
இயல்பாயிற்று...

கால்நீட்டி அமர்ந்து
பின் எழுகையில் எல்லாம்
இடதுகையா வலதுகையா
ஊனப்படுவதெது என
இருபாட்டிகளும் வேடிக்கை
 பார்க்க
தூக்கி விட 
அவன் வரும் காலம் 
எதுவென
உள்ளம் ஏங்கிற்று...

பிரிவிற்கு பின்னரான
கூடலை எல்லாம்
கவித்துவமாய்
பதிவுசெய்ய 
ஆசையெல்லாம்
வெறி கொண்டலைய 
செல்பிக்களால் எங்கள்
உலகம் நிறமாறிற்று...

முற்றோதலையும்
சிவபுரானத்தையும்
இளையராஜாவையும்
ரசிக்க கற்ற
என் செல்லம்
செல்பிக்கும்
முகம்காட்ட
 கருப்பைக்குள்
கற்றாயிற்று!!!!!!

கடலாறு மாதம் காண
எம்தலைவன் செல்லும்
பின்னொரு 
கோடை காலத்தில்
எங்களுக்கான
ஏங்கங்கள் 
பற்றாய்(debit) வைக்கப்படும்
அவன் வரவால்
வரவாகும்(credit) வரை!!!!

டாட்டூ

சற்றே பெரிய கதை....

நான் கௌதம்..சென்னைல வேலை..கம்ப்யூட்டர் இன்ஜினியர்...இதோ லீவ் ல சொந்த ஊரு கோயமுத்தூருக்கு வந்திருக்கேன்...ஒரு முக்கியமான வேலையை இம்முறை முடித்தே சென்னை திரும்ப வேண்டும்னு முடிவெடுத்திருக்கேன்

     என் நிறைவேறாத காதலின் ஓர் அடையாளம் நெஞ்சில் டாட்டூவாய் உறுத்திக் கொண்டே இருந்தது..அதை ஸ்கின் ஸ்பெசலிஸ்ட்டிடம் காட்டி அழித்துவிட முடிவெடுத்தேன்..

    ஊரின் பிரபல மருத்துவமனையின் டாக்டரிடம் டோக்கன் போட்டுவிட்டு காத்திருந்தேன் ...அப்பதான் அவங்களைப் பார்த்தேன்...

அம்மாவும் பொண்ணும்... நடுத்தர குடும்பமாய் இருக்க வேண்டும்...இருவருமே ஹோம்லி அழகு..பெண்ணிற்கு 17_18 வயதிருக்கலாம்..அம்மா பின் முப்பதுகளில் இருந்தார்..காத்திருந்த அனைவருமே மொபைல் நோண்டிக் கொண்டிருக்க.. இருவர் மட்டும் சுவாரஸ்யமாய் பேசிக் கொண்டே இருந்தனர்...

        எனக்கு ரொம்ப ஆச்சர்யம் ..அப்படி அம்மாவும் பொண்ணும் என்னதான் பேசுவாங்கன்னு...காத்திருந்து பொறுமை அற்ற நிலையில் மகள் எழுந்து ரிசப்சனிடம் விசாரிக்க...அடுத்ததாய் அவர் தான் என அவள் என்னை சுட்டி காட்டினாள்..
    
        அவள் ஸ்நேகமாய் சிரித்துவிட்டு அவள் முறை எத்தனாவதென விசாரித்துக் கொண்டிருந்தாள்..அழகிய முகம்.. ப்யூட்டிபார்லர் காணாத புருவங்கள்.. எலுமிச்சை நிறம்..... இயல்பிலேயே சிவந்த உதடுகள்...யாருடனும் ஸ்நேகமாகும் பாவம்..நீளமான கூந்தல்..நேர்த்தியான சுடிதார்..மொத்தத்தில் அம்சமாய் இருந்தாள்..

                எனைமறந்து நான் அவளை ரசித்துக் கொண்டிருந்த வேளையில் ஒரு பெண் குழந்தையை இடுப்பில் வைத்தவாறு அவளை கடக்க அந்த குட்டி இவள் ஷாலை பிடிவாதமாய் பற்றிக் கொண்டு இழுக்க..முகம் கொள்ளா சிரிப்புடன் குழந்தையை வாங்கி கொஞ்சி பின் அதன் அம்மாவிடம் கொடுத்துவிட்டு நானிருக்கும் திசை பார்த்து சிரித்தாள்..

     ஒருகனம் இதயம் நின்று துடித்தது..அனிச்சையாய் என் தலை பின் திரும்ப என்னருகே அவள் அம்மா..அவ அவங்கம்மாவ பாத்து சிரிச்ருக்கா...இது புரியாத நான் வழிந்து வைக்க...அவள் இதழோர இளநகையுடன் ஒரு ஓரப் பார்வை பார்த்து அவள் அம்மா அருகே வந்து உட்காரவும் என் டோக்கன் நம்பர் அழைக்கவும் சரியாக இருந்தது...

           அவள் எனக்கு ஏதோ உணர்தினாள்.. என் பழைய காதலை டாட்டூவிலிருந்து மட்டுமல்ல என் மனதிலிருந்தும் அழிக்க என்னால் முடியும்னு அவளை நான் ரசிச்ச கனத்தில் உணர்ந்தேன்..

             டாக்டர பாத்திட்டு வெளில வந்தப்போ அவ அங்க இல்லை..பாத்தே ஆகனும்னு தோனல...ஆனா ஏதோ நிறைவா 
இருந்திச்சு .....

Thursday 15 July 2021

ததாஸ்து ❤

காரின் பின்னிருக்கையில் மகன்மடியில் சாய்ந்து
கண் உறங்க முனைந்த வேலையில் headset இன் ஒரு கேட்கும் முனையை என் காதில் வைத்து கேட்க சொல்கிறான். வடிவேலுவின் நகைச்சுவைக்கு இருவருமாய் சிரித்து கார் ஓட்டி கொண்டிருக்கும் மகளின் கவனம் ஈர்க்கிறோம். சிறிய உதட்டு சுழிப்போடு அவள் வண்டி ஓட்டும் அழகை மகன் மடி சாய்ந்தவாறே ரசித்து கொண்டேன்.

பெரிதாய் இவள் எதுவும் உங்களிடம் கேட்கவில்லை. ஒருமுறை ததாஸ்து சொல்லி போங்கள். ♥️

Monday 22 June 2020

தனிமையிலே இனிமை ❤️

மொட்டை  மாடியில் இரவின் வானம் மனம் மயக்கும் அனுபவம்... ஆழ மூச்சிழுத்து வாசனை உணர முயற்சித்தேன்..  எதுவும் நினைவில் இல்லை.. பரபரவென கைகளை தேய்த்து முகத்தில் படர்ந்த முடிகளை ஒதுக்கிவிட்டு மீண்டும் முயற்சி செஞ்சு பார்த்தேன்... மூளை காலியாக தோன்றியது..  தூரமாய் தெரியும் நட்சத்திர  வெளிச்சம்... கொஞ்சம் கொஞ்சமாக பெருசா தெரிஞ்சுது... கண்கள்  கூச  மனம் வாய் விட்டு சிரிக்க ஆரம்புச்சுது...

எதுவுமில்லாத மனம் யாருக்கும் வாய்ப்பதில்லை  வாய்க்க பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள்...

எந்த சிந்தனையும் இல்லாது என்னால் இப்போதெல்லாம் அதிக நேரம் தனிமையை கையாள முடிகிறது...

ஆனால் அந்த தனிமை கிடைக்காத போது ஆயாசம் ஏற்படுவதை தடுக்க முடியவில்லை...

தனிமையிலே இனிமை காண முடியும் 😊

சிறகு விரிக்கும் கற்பனை ❤️

ஆளில்லாத வீட்டில் பொருட்கள் பேசுமா..

ஒளிந்திருந்து அறிந்திடும் பேராவல் குறுகுறுக்க அதையே செய்தும் பார்த்தேன்.. எங்களின் காதலுக்கும் மோதலுக்கும் சாட்சியாய் இருந்தவைக்கு காதலிக்க தெரியுமா...  சண்டையிட்டு கொள்ளுமா...  

   பேராவல் பொங்க திரை மறைவில் காத்திருந்தேன்...  

     ஆக்கி வைத்த பானைகளும்  கிண்ணங்களும் சூடு பொறுக்க முடியலைன்னு முதலில் வாய் தொறக்க.. சுழன்று சுழன்று துவைத்த நான் பாவமில்லையா என washing machine னும் தன் பங்கிற்கு கதறியது.. 

       இடை விடாது கத்தித் தவிக்கும் தன்னை யாரும் பாக்கலியானு உடனே home theatre உறுமியது.. வெங்காயத்தை நறுக்கி விட்டு கழுவாமல் வைத்து விட்டு நான் வந்ததை குற்றமாய்ச் சொல்லி அரிவாள்மனை
கண்ணீர் வடித்தது...

        நான்கு காலில் நின்ற நாற்காலியோ
ஒரு படி மேலேறி... முறுக்கி விட்டுக்  கொண்டது.. எல்லாம் கேட்டுக் கொண்டே மிக்ஸியும் கிரைண்டரும்.. புன்சிரிப்பாய் சிரித்துக் கொண்டன... 

       இத்தனைக்கும் நடுவில் அந்த கட்டிலும் மெத்தையும் losliyavum  kavin ணுமாய் காதல் செய்து கொண்டிருந்தது தான் hilight 😍

திடீரென அடித்த காற்றில் திரை அகல என்னைப் பார்த்து யாவும்  மீண்டும் தன் நிலைகே திரும்பியதாய் நான் நம்ப வைக்கப்பட்டேன்... ❤️

Monday 6 January 2020

மனம்

தலைவாசலில்
தலைசாய்க்க எண்ணி
தொப்பென தலையனை
தூக்கி போட்டேன்...
ஊர்ந்த எறும்புக்கூட்டம் 
சிறிது அதிர்ந்து சிதறி
மூக்கும் மூக்கும் முட்ட
சில நொடிகள் அங்கலாய்ப்புக்குபின்...
மீண்டும் அதே வரிசையாய்...

அதன் வரிசை மாற்றும்
துர்நோக்குடன் சிதறிகிடந்த
பூந்தியின் துளிபாகம் வைத்து
அதன் வழி மறைத்தேன்...
முட்டி நின்ற முதல்எறும்பு
திகைத்து தடுமாற
பின்வந்த எறும்புகளுக்குள்
கலவரம் ஆனது....
முட்டி முட்டி
முத்தமிட்டதோ....
தலையிடித்து வன்மம்
தீர்த்ததோ...இலலை
தலைமையின் உத்திரவு
கேட்டதோ தெரியவில்லை...
பூந்தியை சுற்றி
வேறு வழி சமைத்து
மீண்டும் பயனித்தது.......

இனி ....தலைவாசலில்
படுப்பதில்லை என்றமுடிவு
தற்காலிகமாக
எடுக்கப்பட்து!!!

Thursday 29 August 2019

பதில் வேண்டிடாத கேள்வி ❤️

நித்தம் கொஞ்சி கொள்வதில்லை
அதற்க்காக நினைவில் நிலைப்பதில்லை...
என்று  பொருள் இல்லை..

செல் பேசி வெட்கம் கொள்ளும்
அளவிற்கு பேசிக் கொண்டதும் இல்லை..
பேசும் அந்த ஓர்  நாள்
நினைவில் எதையும் நிறுத்தியதாக
நியாபகம்  இல்லை...

விசாரிப்புகளில்  தொடங்கிடும் உரையாடல்
குரல் தெளிவில் சொக்கி கிடந்திடும் வேளைகளில்..
பேர் சொல்லிடும் அழைப்புகள்
போதையின் இன்னும் ஒரு பரிணாமம்..

நிகழ்வுகளை கவிதை ஆக்கிட
"அதன்" துணை அவசியமோ..?

"இதன் துணை" என
சொல்லித்  தெரிய வேண்டியதில்லை..
அப்படித்  தானே?

எதையும் தர்க்க ரீதியில்
உணர வைத்திடும் வாய்ப்  பேச்சுக்கு
அலைபேசி  முத்தம் என்னவோ
சற்றுக்  குறைவு தான்..

என் இப்போதைய கேள்வி எல்லாம்
பேசிச் சென்ற பிறகு
நீ துடைத்து கொண்டது
நெற்றியையா  கன்னத்தையா
இல்லை
உதட்டையா  என்பது மட்டுமே..

பதில் வேண்டிடாத கேள்வி ❤️